புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை செயலாளர் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளருக்கும் கடந்த 24ம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார். அதில் வரும் 31ம் தேதிக்குள்ளாக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் தேசிய கல்விக்கொள்கை குறித்து கருத்துகளை இணைய தளம் மூலமாக தெரிவிக்கவேண்டும் என்று அறிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் தியாகராஜன் அளித்த பேட்டியில், “கொடிய கொரோனா தொற்றால் மனித உயிர்கள் மடிந்து கொண்டிருக்கும் காலத்தில் அவசர அவசரமாக தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு துடிப்பது ஏன்..

மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயல்வதை ஏற்க இயலாது. மேலும் மத்திய அரசு நேரிடையாக மாநில அரசின் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது என்பது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து அவசர அவசரமாக ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது என்பது ஏதோ நடைமுறைக்காக கேட்பதுபோல் தோன்றுகிறது.

மேலும் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் வெளியிடாமல், இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு, ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது கண்டனத்துக்குறியது.

இதற்கு தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 சார்ந்த தமிழக அரசின் நிலைப்பாட்டினை உடனடியாக தெரிவிக்கவேண்டும். பல்வேறு முரண்பாடுகளை கொண்டுள்ள தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்கவேண்டும்.

இதனை ஏற்காமல் மத்திய அரசு இதே வடிவில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி வீதிக்கு வந்து போராடுவோம். தமிழக முமுவதும் பெரும்பான்மையான ஆசிரியர்களை ஒன்றுதிரட்டி தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட முன்னெடுப்போம் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: செப்டம்பர்-01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு தமிழக லாரி உரிமையாளர் சங்கம் கடும் கண்டனம்