அரசியல் கல்வி தமிழ்நாடு

மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக; போராட்டத்தை முன்னெடுக்கும் திமுக

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுக அரசுக்கு எதிராக திமுக நாளை (அக்டோபர் 24) கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டி, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

இதனிடையே, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், இந்த உள் ஒதுக்கீடு நடைமுறையை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு பதில் அளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருவதாகவும், அது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும், தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் வருகிற 24ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

நீட் முறைகேடு புகார்: 10, 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண், நீட் தேர்வில் ‘0’ மதிப்பெண்

மேலும் வாசிக்க: அம்பானிக்கும், அதானிக்கும் மட்டும் வேலை செய்வார் பிரதமர் மோடி; ராகுல் காந்தி கடும் தாக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.