செஸ் மற்றும் இதர வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் மாநிலங்களுடன் பகிரப்படாமல் இருப்பதால் 2021-22 நடப்பு நிதியாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கருத்து கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

குறிப்பாக கடந்த சில மாதங்களில் நூல் மூலப்பொருட்களின் விலை 30% முதல் 200% வரை உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியது தவறு. இந்த முடிவை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும். சிறு குறு தொழில்துறையில் இருக்கும் பல லட்சம் பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள். எனவே நூல் மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பிடிஆர் இந்த கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எழுதியுள்ள கடிதத்தில், “செஸ் மற்றும் இதர வரிகள் கடந்த 10 ஆண்டுகளில் (2010 – 11ல் 6.26 சதவீதம் இருந்து 2020-21 ல் 19.9 சதவீதம்) மூன்று மடங்கு அதிகரித்துள்ள போதும் இந்த வரி மொத்தமும் மாநில அரசுடன் பகிரப்படாமல் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாநிலங்களுக்கு 20% நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நிதி ஆதாரங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வதையும் மாநிலங்களுக்கு சில வரிவிதிப்பு அதிகாரத்தையும் நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

இருந்தபோதும், செஸ் மற்றும் இதர வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் மாநிலங்களுடன் பகிரப்படாமல் இருப்பதால் 2021-22 நிதியாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. சமநிலையில்லாமல் ஒன்றிய அரசிடம் இவ்வாறு குவிக்கப்படும் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உண்மையான நிதி கூட்டாட்சி முறைக்கு எதிரானது.

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 2020- 21 ல் நேரடி வரி வருவாயை மிஞ்சியுள்ளது. சமசீரற்ற மிகவும் பிற்போக்குத் தனமான இந்த மறைமுக வரிகள் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கு இடையே 60 க்கு 40 என்ற விகிதாசாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு உதவ, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் ஒன்றிய அரசின் முதலீட்டு நிறுவனங்கள் மாநில அரசின் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களுக்கு கடன் வழங்க முன்வரவேண்டும்.

குறைந்த வட்டியில் பணம் வழங்கும் இந்த ஒன்றிய அரசு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழில்முனைவோருக்கு கடன் வழங்கும் தமிழக நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில்லை, தொழில் வளர்ச்சி மேம்பட உடனடியாக நிதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்காக கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசு சலுகை விலையிலோ அல்லது இலவசமாகவோ நிலங்களை வழங்கியது. தனியார்மயமாக்கலின் போது விற்கப்பட்ட இந்த நிலங்களுக்கான தற்போதைய சந்தை மதிப்பு விலையை நியாயமான இழப்பீடாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும் அல்லது அந்த மதிப்பிற்கு இணையான பங்குகளை புதிய நிறுவனங்களில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

வெளிநாட்டு நிதி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆண்டொன்றுக்கு ஒரு மாநிலத்திற்கு ஒரு திட்டத்திற்கு மட்டுமே அனுமதி என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தற்போது விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.

வெளிநாட்டு நிதி உதவித் திட்டங்களை பெறுவதிலும் அதனை திறம்பட செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு நம்பகமான மாநிலமாக உள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் மூலம் தமிழ்நாட்டில் புதிய திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி கிடைக்காமல் போவதோடு திறன் மற்றும் செயல்படுத்தும் தன்மையைப் பொறுத்து மற்ற மாநிலங்களுக்கு கிடைக்கப்பெறும் நிதி மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால்,

இந்தியாவுக்கான மொத்த வெளிநாட்டு நிதி உதவியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இந்த கட்டுப்பாட்டை நீக்கி சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் வளர்ச்சியை ஒன்றிய அரசு மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் மேலும் பல புதிய ரயில்வே திட்ட பணிகளை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.