இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனித கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண்குமார் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில், மனித கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மரணிக்க நேர்ந்தால் அவர்களது மரணத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

மனித கழிவுகளை அள்ளுதல், நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது தேவையான கையுறைகள், தலைகவசம், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்கு அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை ஒன்றிய அமைச்சரவையின் அனைத்து துறைகளுக்கும், மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது சட்டப்படி குற்றம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் மரியாதையுடன் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன என்கிறது சட்டம். ஆனால் இதுகுறித்து அங்கங்கு சில விழிப்புணர்வு இருந்தாலும் பெரும்பாலும் இது நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம் என்கின்றனர் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதற்கு எதிராக போராடிவரும் செயற்பாட்டாளர்கள்.

மேலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, ஏராளமான உடல் உபாதைகள், போதிய ஊதியம் இல்லை, சமுதாயத்தில் மரியாதையும் இல்லை. இதுதான் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் நிலை. இதன் அடிமட்டத்தில் சாதிய வேறுபாடுகள் மிக வலுவாக வேறூன்றி உள்ளது. மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது சாதி ரீதியான கொடுமை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

1991- 1996 அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் முறைகேடு; முன்னாள் அமைச்சர் கைது