மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்த சிறப்பு நீதிமன்றம், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது இன்று (10.3.2023) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், நேற்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது அவரிடம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. மணீஷ் சிசோடியா விசாரணைக் காவலுக்கு அனுப்பப்பட்டதால், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.