இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

ஆனால் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று 9வது நாளாக நீடிக்கிறது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர், பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மே 4 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இருப்பினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படும்வரை போராட்டம் தொடரும் என வீரர்கள் அறிவித்துள்ளனர். போராட்டம் தீவிரமடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

இதற்கிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திமுக எம்.பி. அப்துல்லா இன்று (01.05.2023) ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வரும் 7 ஆம் தேதி மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அந்த தேர்தலை விளையாட்டு அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன், 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கும், மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிப்பதற்கும் ஒரு தற்காலிக குழுவை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.