தனியார் தொலைக்காட்சியில் பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைகளுக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்தவரை, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கயத்தாறு காவல்துறையினர் கைது செய்து கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் குழந்தைகள் பங்கேற்கும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் காமெடியோடு சமூக கருத்துக்களையும் கூறும் வகையில், தந்தை பெரியாரின் கருத்துகளை அவரைப்போலவே வேடமிட்டு நடித்துக் காட்டியிருந்தார்கள்.

பெரியார் கருத்தை நாடக வடிவிக் கையில் எடுத்திருந்த சிறுவர்கள், பெண் விடுதலை, பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? மததத்தை தூக்கியெறியச் சொல்லியது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய காட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சகளில் பதியும் வண்ணமாக அமைந்திருந்தது.

குறிப்பாக, பெரியாரின் வேடமணிந்திருந்த சிறுவன், “கடவுள் மறுப்பு என்பது என்னுடைய கொள்கையே இல்லை. எல்லோரையும் சமமா நடத்தனும்ங்கிறது மட்டும் தான் என்னோட எண்ணம்”போன்ற வசனங்களையும், பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்து பேசியிருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மூலம் வெளிவந்த பெரியாரின் கருத்துகள் சமூக வலைதளங்கள் வாயிலாக லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தது. குழந்தைகள் பங்குபெற்ற இந்த வீடியோ வைரலானது. இதனையடுத்து அந்த சிறார்கள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பாராட்டுகளையும் பெற்றிருந்தார்கள்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் வளைவு ரோட்டை சேர்ந்தவர் குருசாமியின் மகன் வெங்கடேஷ்குமார் பாபு (36), கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தந்தை பெரியார் போல வேடமிட்டு குழந்தைகள் நடித்த நிகழ்ச்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “பெரியார் வேஷம் போட்ட இந்த குழந்தையை அடித்து கொன்று ரோட்டில் தொங்க விட வேண்டும், அப்போது தான் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பயம் வரும் . ஏன் வா.உ.சி., தேவர், பாரதி, நேதாஜி இவர்கள் வேஷம் போட முடியாதா..” என்று பதிவிட்டுருந்தார்.

தனக்கு பிடிக்காத வேடமாக இருந்தாலும் மழலை என்று பாராமல் காட்டுத்தனமாக பேசிய வெங்கடேஷ்குமார் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. அவரது பதிவு தொடர்ந்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரும் கண்டன ம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும், தலைவர்களை அவமதிக்கும் வகையிலும், சமூகத்திற்கு எதிராக கலகத்தை துண்டும் வகையில் வாசகங்கள் பதிவிட்டு வெளியிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக திமுக நகர செயலாளர் சுரேஷ்கண்ணன் கயத்தாறு காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து கயத்தாறு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ்குமார் பாபுவை கைது செய்தனர். பின்னர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.