ஹைதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் ஹெர்னியா பாதிப்பு காரணமாக மஹேஷ்வரி சௌதாரி என்பவருக்கு நவம்பர் 2, 2018-ல் மருத்துவர் வேணுமாதவ் தலைமையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
இந்நிலையில், மஹேஷ்வரிக்கு தொடர்ந்து வயிற்று வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து அதே மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
 
அப்போது நடைபெற்ற பரிசோதனைகளின் அடிப்படையில், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோல் வயிற்றில் இருப்பது எக்ஸ்ரே பதிவில் தெரியவந்தது.
 
இதனால் அவருடைய கணவர் ஹர்ஷவர்தன் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பஞ்சகுட்டா காவல்நிலைய துணை ஆணையர் விஜய் குமார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 
இதனிடையே மஹேஷ்வரிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த கத்தரிக்கோல் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் பெற்று வருவதாக நிம்ஸ் மருத்துவமனை தலைவர் மனோகர் தெரிவித்தார்.
 
இவ்விவகாரம் குறித்து விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.