சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, காவல்துறையில் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக காவல்துறையினருக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி, வேலை நேரம் இரண்டு ஷிப்டுகளாக பிரிப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை டிஜிபி திரிபாதி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு சில பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதிலும் கர்ப்பிணி காவலர்களுக்கும், 50 வயது மேல் உள்ள காவலர்களுக்கும் அதிக பணிச்சுமை உள்ள இடங்களில் நேரடியாக பணியாற்ற இடங்களை ஒதுக்க வேண்டாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் பணியின் போது பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது அவர்கள் செல்லும் வழிப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக நீண்ட நேரம் பெண் காவலர்கள் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

அதுபோன்ற நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண் காவலர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஜிபி திரிபாதியிடம் அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தில் அவர் செல்லும் வழிகளில் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பான எழுத்துப்பூர்வ உத்தரவு விரைவில் அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐஜி.க்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களும் அர்ச்சகர் ஆக சிறப்பு பயிற்சி- அமைச்சர் சேகர்பாபு