நடிகர் புனித் ராஜ்குமார் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது ரசிகர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் காலமானார். இவரின் இறப்புச் செய்தியை அறிந்து கன்னட திரையுலகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது. மேலும் புனித் ராஜ்குமாரின் மறைவு அவரது ரசிர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டதை அறிந்த உடனே அவரது ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது. இதனையடுத்து பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தி கேட்டு ரசிகர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம், பெல்காம் நகரத்தைச் சேர்ந்தவர் ராகுல் (21). புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான இவர் அவரது மறைவு செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், துக்கம் தாங்க முடியாமல் உயிரை விட துணிஞ்ச ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அதேபோல், புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு முனியப்பன், பரசுராம் என்ற ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் புனித் ராஜ்குமார் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.