அரசியல்

புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை; ஆவடி CRPF தலைமை அதிகாரி அசத்தல்

ஆவடியில் செயல்பட்டுவரும் CRPF தலைமை அதிகாரி ஒருவர் புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை (PPE kit) வடிவமைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் குறையாமல் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில உள்ளது. இதுவரை 91,77,840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 1,34,254 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களும் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க ‘பிபிஇ கிட்’ எனப்படும் பிளாஸ்டிக்கால் பூசப்பட்ட கவச உடை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உடையில், காற்று புகவாய்ப்பில்லாததால், வியர்வை அதிகமாக சுரப்பதாகவும், அதை அணிபவர்களின் உடலில் வெப்பம் அதிகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதனால், பல்வேறு துறையினர் மாற்று கவச உடை தயாரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வளாகத்தில் உள்ள அதிவிரைவு படையின் 97-வது படைப்பிரிவின் தலைமை அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கவச உடையை வடிவமைத்துள்ளார்.

இந்த உடையை காவல்துறையினருக்கு அணிவித்து, அறிமுகம் செய்து எரிக் கில்பர்ட் ஜோஸ் கூறியதாவது, “இந்த பிபிஇ கிட்டானது, எம்பிஎஸ் (Microbial prevention suit- MPS) எனப்படும் நுண்ணுயிரிகளை தடுக்கக் கூடிய வகையில், எந்தவிதமான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது மட்டுமின்றி, நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கவச உடையில், உயர் வெப்பத்தின் போது கூட திரவம் மற்றும் நுண்ணுயிரிகள் உட்புக முடியாது. உடல் வெப்பமாகாமல் இருக்கும் படியும் மேலாடை, கீழாடை, காலுறை என 3 பகுதிகளாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், சாதாரண ஆடையை அணிந்திருப்பதை போன்ற உணர்வை அளிக்கும் இந்த உடையை அணிந்து கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி சிறப்பாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும்.

இந்த கவச உடையை கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளிஆராய்ச்சிகழகம், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை உள்ளிட்டவை ஆய்வு செய்து, மிகவும் பாதுகாப்பான ஆடை என சான்றளித்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் ரத்தான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.