விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்று கூறியதற்கு, ‘அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்’ என்று மிகுந்த ஆணவத்துடன் பிரதமர் மோடி பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் தாத்ரியில் நேற்று (2.1.2022) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஆளுநர் சத்யபால் மாலிக், “அண்மையில் பிரதமர் மோடியை நான் சந்தித்தேன். 5 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன்.

அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட் டனர் என்றேன். அதற்கு பிரதமர் மோடி மிகுந்த ஆணவத்துடன் ‘அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்’ என்று கேட்டார்.

நான் பிரதமரிடம் ஆமாம். நீங்கள் மன்னராக இருப்பதால் உங்களிடம் தெரிவித்தேன் எனக் கூறி, அவருடன் வாக்குவாதம் செய்தேன். அவர் உடனே நீங்கள் அமித்ஷாவை பாருங்கள் என்றார்.

நானும் அமித்ஷாவை பார்த்தேன். அமித்ஷாவோ ஒரு நாய் இறந்தாலும் கூட பிரதமர் இரங்கல் கடிதத்தை அனுப்புகிறார் என்று கூறினார். அவர்களின் பேச்சு குறித்து இவ்வாறாக மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் குறிப்பிட்டார்.

சத்யபால் மாலிக் காஷ்மீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் கோவாவுக்கு மாற்றப்பட்டார். தற்போது மேகாலயா கவர்னராக இருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய கருத்துகளுக்காக பணியிட மாறுதல்கள் நிகழும் என்றால் அதற்காக நான் சிறிதும் அஞ்சப்போவதில்லை என்று சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

இந்நிலையில் மேகாலயா கவர்னரின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு அடங்கிய வீடியோவை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘பிரதமரின் தற்பெருமை, கொடூர சிந்தனை மற்றும் உணர்வற்ற போக்கை இது காட்டுகிறது’ என்று காங்கிரஸ் சாடியுள்ளது.