உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்களை போலி நிறுவனங்கள் ஏமாற்றாத வகையில் தமிழக அரசு புதிதாக விதிகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேஸ்கேட் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்களின் பின்னணியை ஆராயாமல், அந்த நிறுவனங்களுடன் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் போடப்பட்டது.
 
இந்த மாநாட்டில் பங்கேற்கும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள போலியான நிறுவனங்களால்
ஏமாற்றப்படுகின்றன. ரோகித் ரபீந்திரநாத் என்பவரது ஜினர்ஜி சோலார் பிராஜெக்ட்ஸ் நிறுவனத்திடம் எங்களது நிறுவனம் ரூ.33 கோடி முதலீடு செய்தோம். அந்நிறுவனம் அந்த தொகையை முறையாக செலவிடாமல் முறைகேடு செய்துவிட்டது.
 
எனவே இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அவற்றை பங்கேற்க அனுமதிக்கக்கூடாது.
 
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை தமிழகத்துக்கு ரூ.1.18 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.  இதன் மூலம் தெரிய வருவது ஆண்டுக்கு வெறும்  16000 கோடி மட்டுமே அதிமுக ஆட்சியில் முதலீடாக பெறபட்டுள்ளது இதற்க்கு காரணம்  அந்நிய முதலீட்டாளர்களை தமிழக அரசு முறையாக பாதுகாப்பது இல்லை.
 
தற்போது ஜனவரி 23-ஆம் தேதி மற்றும் ஜனவரி 24-ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் எங்கள் நிறுவனத்தைப் போன்ற அந்நிய முதலீட்டாளர்களை ஏமாற்றும் போலி நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு புதிதாக விதிகளை வகுக்கவும், அதன்பின்னர் இந்த மாநாட்டை நடத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
 
மேலும் குற்றப்பின்னணிக் கொண்ட மற்றும் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் எஸ்.பிரபாகரன், பி.வில்சன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
 
அப்போது நீதிபதிகள், கடந்த காலங்களில் இதுபோல விதிமுறைகள் ஏதாவது வகுக்கப்பட்டுள்ளதா? எதன் அடிப்படையில் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கோருகிறீர்கள்?
 
மாநாட்டில் பங்கேற்பதும் பங்கேற்காததும் நிறுவனங்களின் விருப்பம் தானே? எனக் கேள்வி எழுப்பினர்.
 
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களை இந்தியாவில் உள்ள போலியான நிறுவனங்கள் ஏமாற்றுவதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
 
அதே போல் குற்றப்பின்னணி கொண்ட நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார்.
 
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், இந்த மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டது. இந்த மாநாட்டின் நோக்கம் சர்வதேச முதலீட்டாளர்களையும் உள்ளூர் முதலீட்டாளர்களையும் இணைப்பதுதான்.
 
இதில் அரசு ஓர் இணைப்பு பாலமாகத்தான் செயல்படுகிறது. இதுவரை இரண்டாயிரத்து 900 முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ. 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
மேலும் நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும்போதே, அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்தும் ஆராயப்படும் என்றார். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.
 
2015 ஆண்டில் அப்போதய முதலவர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அரசில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி மதிப்பில் ஓப்பந்தங்கள் போடப்பட்டு இருப்பதாக சொல்லபட்டதும் ஆனால் அதில் முதலீட்டாளர்கள் 11000 கோடி கூட முதலிடு செய்யமால் சென்றதும் கூறிப்பிடதக்கது ..