மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் தெஹ்ஸில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே எனும் விவசாயி. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறந்த முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவைச் சந்திக்க மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தால் தேர்வுசெய்யப்பட்டவர்.
 
தொலைதொடர்புத்துறையில் பேசும் வகையிலான புதிய முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வானிலை மாற்றம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான தகவல்களைப் பெறும் வசதியை ஏற்படுத்தியது தொடர்பாக இந்த வாய்ப்பு அமைந்ததாக ஒபாமாவுடனான சந்திப்பு குறித்து சஞ்சய் தெரிவித்திருந்தார்.
 
மேலும், விவசாயத்தில் உள்ள புதிய முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக இந்திய வானொளி மையத்தில் பேசுவதற்காகவும் அழைக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிரபல செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் விவசாயம் தொடர்பான அரங்கை உருவாக்கினார். அதை ஒபாமா பார்வையிட்டார். இவை மூலம் விவசாயத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று வருவதாகவும் சஞ்சய் தெரிவித்தார்.
 
ஒரு கிலோ வெங்காயம் ரூ.1-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சந்தை அதிகாரிகளுடன் நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.1.40-க்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் மொத்தமுள்ள 750 கிலோ வெங்காயம் வெறும் ரூ.1,064 மட்டுமே விலைபோனது.
 
ஆனால் மஹாராஷ்டிர மாநிலத்தில் 750 கிலோ வெங்காயத்துக்கு ரூ.1,064 மட்டுமே கிடைத்ததால் விவசாயி விரக்தியடைந்தார்.
 
இதனால் அந்தப் பணத்தை பிரதமர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். அதிலும் மணி ஆர்டர் செய்ததற்கு தன்னுடைய பணத்தில் இருந்து ரூ.54 கமிஷனும் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
இதுகுறித்து சஞ்சய் சாதே கூறுகையில்,
 
ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.1.40-க்கு மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. இதனால் எனக்கு 750 கிலோ வெங்காயத்துக்கு ரூ.1,064 மட்டுமே கிடைத்தது.
 
கடந்த 4 மாத உழைப்புக்கு எனக்கு கிடைத்த வெகுமதி இதுதான். அதிலும் நிவாரணத் தொகைய அனுப்பியதற்கு ரூ.54 கமிஷன் தொகையும் எனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்தியுள்ளேன்.
 
நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மீது எனக்கு கோபம் வருகிறது என்று தெரிவித்தார்.
 
மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் மாவட்டம் இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் 50 சதவீதத்தை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.