மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 15 நாட்கள் கால அவகாசத்தில் 1ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன், கடந்த ஜூன் 28, 29-ம் தேதி தனது ட்விட்டர் பதிவில், தலைமை நீதிபதி குறித்தும், நீதித்துறை குறித்து விமர்சித்து வெளியிட்ட பதிவுகள் சர்ச்சை ஏற்படுத்தியது. நீதித்துறையை விமர்சிப்பதாகக் கூறி பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்தது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து, பிரசாந்த் பூஷன் குற்றவாளி என ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும், இந்த வழக்கில், தீர்ப்பு தேதியை ஆகஸ்ட் 25-க்கு தள்ளி வைத்தது.

கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், பிரசாந்த் பூஷன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்காக நீதிமன்ற அமா்வு அவருக்கு 30 நிமிடங்கள் அவகாசம் அளித்தது. இருந்தபோதும் பிரசாந்த் பூஷண் தனது கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, ‘ஒரு நபா் தான் செய்தது தவறு என்பதை உணர வேண்டும்’ என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரங்கள் குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து உள்ளது. மேலும், இந்த அபராதத் தொகையை செலுத்த செப்டம்பர் 15 வரை கால அவகாசமும் வழங்கி உள்ளது.

ஒரு வேளை அபராதத்தை செலுத்தத் தவறினால் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்ற தடை, மற்றும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: மன்னிப்பு கேட்க முடியாது, தண்டனையை ஏற்க தயார்…உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்