கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் திருமுருகன் காந்தி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கு மேல்சிறையில் உள்ள திருமுருகன் காந்திக்கு நேற்று முன்தினம் காலை வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய திருமுருகன் காந்தி இந்திய அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் திருமுருகன் காந்தி அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் யாருமே பயன்படுத்தாத பழைய பாழடைந்த கட்டிடத்தில் உள்ள அறையில் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் சிறையில் திருமுருகன் காந்திக்கு வழங்கப்படும் உணவு மிகவும் மோசமான நிலையில் சாப்பிட இயலாத வகையில் உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் அவருக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த வாரம் சிறையிலேயே திருமுருகன் காந்தி மயங்கி விழுந்ததாகவும் காவலர் ஒருவர் அவரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் சொல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து குணமாகிவிட்டதாக வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருமுருகன் காந்தி தொடர்ந்து தனி அறையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய உணவுகள், மருந்துகள் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக இன்று மீண்டும் வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு, செரிமானக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் திருமுருகன் காந்தியை அழைத்து வந்த காவல் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்றும், மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்புங்கள் என்று மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது மருத்துவமனையின் மருத்துவர், இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருக்கும் நோயாளி, அவரது உடல்நிலை இருக்கும் நிலைக்கு சிகிச்சை அளிக்காமல் தன்னால் அனுப்ப இயலாது என்று தெரிவித்துள்ளார். மருத்துவரின் தொடர்ச்சியான பரிந்துரை காரணமாக தற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையின் IMCU எனும் வார்டில் திருமுருகன் காந்தி அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக முறையான உணவு சாப்பிடாத திருமுருகன் காந்தி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உரிய சிகிச்சைகள் மூலம் அவரை குணப்படுத்திவிடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.