பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரத்தை நேரில் சந்தித்து ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டு, அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார் லிடியன். 14 இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்த லிடியன் ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிச் சுற்றில் லிடியன் இரண்டு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்திவிட்டார்.

சிறிதும் பிழையில்லாமல், துணிச்சலாகவும் விவேகமாகவும், சராசரி மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக லிடியன் பியானோ வாசித்ததை பார்த்த நடிகர்கள் சூர்யா, மாதவன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆச்சரியமடைந்து தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து பாராட்டினர்.

இந்நிலையில், இன்று மாலை லிடியன் நாதஸ்வரத்துக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இசையின் மந்திரத்தை வெளிபடுத்தியுள்ள லிடியன், சர்வதேச அளவில் இசை தூதராக லிடியன் வரவேண்டும் என்று பாராட்டினார்.