பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக பேஸ்புக் இந்தியா நிர்வாகம் மீது உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல், வெறுப்பு பேச்சுகளை கண்டுகொள்ளாத பேஸ்புக் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ஆளும் பாஜவை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெறுப்பு பேச்சு மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டியிருந்தது.

வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவிட்ட மற்றும் வன்முறைகளில் பங்கேற்ற பயனாளர்களின் கணக்குகுகளை தடை செய்வதை இந்தியாவில் இருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரி அங்கி தாஸ் என்பவரின் தலையீட்டால் தடுக்கப்பட்டது என்று பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களை மேற்கோள்காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவினர் வெறுப்பு பேச்சை கண்டித்தால், நாட்டில் அந்நிறுவனத்தின் வணிக வாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாகி கூறியதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களை மேற்கோள் காட்டி, பேஸ்புக், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாராளுமன்ற ஐ.டி. நிலைக்குழு பேஸ்புக் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் என, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் பேஸ்புக்தலையிடுகிறது. எனவே பேஸ்புக் தலைமையகம் இந்திய தலைமைக் குழுவினரிடம் உயர்மட்ட விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க: இந்தியாவில் பாஜகவுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் பேஸ்புக் – வலுக்கும் எதிர்ப்புகள்