மத்திய பிரதேசத்தில் அரசு பணிகள் அனைத்தும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தங்கள் மாநிலங்களில் பிற மாநிலத்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன. தமிழகத்திலும் அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்குத் தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தென்னக ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களுக்கு வடமாநிலத்தவர் பெரும்பான்மையோர் நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிராக தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல எதிர் கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் துறைகளில் சொந்த மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத், தனியார்துறையில் மண்ணின் மைந்தர்களுக்கு 70% வேலைவாய்ப்பு வழங்கும் சட்டத்தை கொண்டுவந்தார்.

தற்போது மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய பிரதேச அரசின் பணிகள் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்க வழிவகை செய்யும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பெயரை திடீர் மாற்றம் செய்த மோடி அரசு