இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தேர்தல் நடைபெற சில வாரங்களே உள்ள நிலையில், ஆளும் பாஜக யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அடுத்தடுத்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதிக் யாதவின் மனைவி அபர்ணா, இன்று (19.1.2022) டெல்லியில் உள்ள தேசிய தலைமையகத்தில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

2017 ஆம் ஆண்டு லக்னோ கன்டோமெண்ட் தொகுதியில் அபர்ணா யாதவ் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு பாஜகவின் வேட்பாளர் ரீட்டா பகுகுணாவிடம் தோல்வி அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்காக செயல்படும் அமைப்பை நடத்தி வரும் அபர்ணா, கடந்த காலங்களில் மோடியை வெளிப்படையாக புகழ்ந்த நிகழ்வுகளும் உள்ளன.

இந்நிலையில் பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய அபர்ணா, “நாட்டிற்கான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக பாஜகவில் இணைந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். பாஜக கட்சியில் என்னால் முடிந்ததைச் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கூறுகையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணாவை பாஜக வரவேற்கிறது. சமாஜ்வாதி கட்சியின் அராஜகத்தால், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் எந்த மகளோ, மகனோ, விவசாயிகளோ நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் மக்கள் நல்லாட்சியை பார்த்துள்ளனர்.பாஜக அரசின் நல்லாட்சியால் அபர்ணா யாதவ் செல்வாக்கு பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

அதேபோல் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசுகையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவால் தனது குடும்பத்தையோ, மாநிலத்தையோ அல்லது கட்சியையோ கவனித்துக் கொள்ள முடியவில்லை.

அவர் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும், சட்டசபை தேர்தலில் போட்டியிட ஒரு இடத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பாஜக ஏற்கனவே முதல் பட்டியலில் தன்னையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் வேட்பாளர்களாக அறிவித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.