புதுச்சேரி மாநில பாஜகவில் இணைந்த 14 வழக்குகளில் குற்றவாளியான பெண் ரவுடி எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சினிமா, விளையாட்டு என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தனது கட்சியில் இணைந்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு குற்றப்பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது.
தமிழகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் பதவி ஏற்றதில் இருந்தே அக்கட்சியில், கொலை உட்பட பல்வேறு குற்றப்பின்னணி உள்ள ரவுடிகள் பலர் இணைந்தது சர்சையை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் பாஜகவில் இருந்தபோது குற்றவழக்குகளில் சிக்கி பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும் தற்போது மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவில் பாலியல் தொல்லை; பாஜக மகளிர் அணி செயலாளர் பகீர் புகார்
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில், முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியும், காவல்துறையால் தேடப்பட்டு வந்த பெண் தாதா எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எழிலரசி மீது கொலை வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல், வெடிமருந்து பயன்படுத்தல், மோசடி வழக்கு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக இவர் மீது இதுவரை 14 வழக்குகள் உள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே வந்த எழிலரசி, தொழில் அதிபர் ஒருவரிடம் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டதாக கூறி, கடந்த 31 ஆம் தேதி காரைக்கால் திருமலைராயன்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவான எழிலரசி நேற்று முன்தினம் புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். மேலும் தன்னை காவல்துறை தேடுவது தெரிந்தே எழிலரசி பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், அவரை பாதுகாக்கும் நோக்கில் பாஜக அவரை இணைத்துக் கொண்டதாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெண் தாதா எழிலரசியை உடனடியாக கைது செய்யவும், இதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்யவும் முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி பாஜகவினர் ரடிகளையும் , குண்டர்களையும் கட்சியில் இணைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பாஜகவின் தரம் என்னவென்பது தெரிந்துள்ளது.
பாஜகவில் இணைந்த தேடப்ப்படும் குற்றவாளியான பெண் தாதா மற்றும் அவருடன் இருந்தவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
ஷாகீன்பாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பாஜகவில் இணைந்து சர்ச்சை