பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை மோசடியால் தமிழக அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலங்கள் கையக்கப்படுத்த உள்ள நிலையில், சிலர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், பத்திரப் பதிவு துறையில் நடந்துள்ள மோசடியால் தமிழக அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அறப்போர் இயக்கம் தமிழக அரசின் அதிகாரிகள் மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அதில், “பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வரப்போகும் இடம் என்பதால் அங்கு நிலம் வைத்திருப்பவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு கிடைக்கும் என்று கணக்கிட்டு, தங்களுடைய 73 ஏக்கர் நிலத்தின் மதிப்பை உயர்த்த கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசனுடன் இணைந்து மோசடி பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 165 கோடி அதிகமாக இழப்பீடு பெற திட்டமிட்டு காத்திருக்கின்றனர். தமிழக அரசு விழித்துக் கொண்டு, உயர் பதவியில் இருந்து கொண்டு திருடர்களுடன் கூட்டணி வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் சீனிவாசன் போன்ற அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

மோசடி பத்திரப்பதிவு மூலம் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மோசடி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்படுமா.. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுமா அல்லது திருட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து மக்களுக்கு துரோகம் செய்யுமா?

மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் மற்றும் இதர அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்களா? மோசடி தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை பாயுமா? மக்கள் பணம் கொள்ளை போகாமல் தடுக்கப்படுமா?” என ஆதாரங்களுடன் ஊழல் மோசடி குறித்து அரசுக்கு புகார் அளித்துள்ளது அறப்போர் இயக்கம்.

இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பல மடங்கு தொழில், பொருளாதார வளர்ச்சி மேம்படும் 2028க்குள் புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கமடையும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.