அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய கலப்படமற்ற தேனுக்கான சோதனையில், பதஞ்சலி, டாபர் உள்பட இந்தியாவில் 10 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் கலப்படம் செய்யப்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயற்கையான மருந்து பொருளாகவும் அனைவருக்கும் பிடித்தமான சுவையுடையதாகவும் விளங்கும் தேன் மருத்துவ ரீதியாக பல பயன்களை வழங்கக்கூடியது.

செரிமானத்திற்கும் புத்துணர்ச்சி அளிப்பதற்கும் என பல்வேறு வகையில் பயன்படுத்தப்படும் தேன் தமிழ் இலக்கியங்கள் முதல் தற்போதுள்ள மருத்துவ முறைவரை பல இடங்களில் புகழ் பெற்றதாக உள்ளது.

இதனால் மக்களிடையே சுத்தமான தேனுக்கு நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது. இதை பல நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக்கி, தங்களுடையது தான் உண்மையான தேன் என்று கூறி ஏமாற்றி வருகிறது.

இந்நிலையில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) தேனில் கலப்படம் செய்வது குறித்து விசாரணை நடத்தி ஆய்வக சோதனைக்கு அனுப்பியது. தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இந்த சோதனை தேவைப்படுகிறது.

ஜெர்மன் ஆய்வக சோதனைகளில் இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களின் 13 தேன் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் சபோலா, மார்க்பெட் சோனா, சொசைட்டி நேச்சுரல் ஆகிய 3 நிறுவனங்களின் தேன் கலப்படமற்ற தேன் என கண்டறியப்பட்டுள்ளது.

பிரபலமான பதஞ்சலி தேன் ( Patanjali Honey), டாபர் ஹனி (Dabur Honey), அபிஸ் ஹிமாலயா (Apis Himalaya), பைத்யநாத் தேன் ( Baidyanath Honey), ஜன்டு சுத்தத்தேன் ( Zandu Pure Honey), ஹிட்கரி தேன் (Hitkari) உள்ளிட்ட 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு குறித்து சிஎஸ்இயின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சு குழுவின் திட்ட இயக்குனர் அமித் குரானா கூறும்போது, “நாங்கள் கண்டுபிடித்துள்ளது உண்மையிலயே அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் கலப்படம் செய்யப்பட்ட வர்த்தகம் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

சர்க்கரை பாகு கலந்த தேனை உண்பதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால், தேனுடைய தரம் குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை மத்திய அரசு நெறிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய நிறுவனங்கள் பல தாங்கள் தயாரிக்கும் தேனில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை பாகை கலக்கின்றன. இந்த பாகு கலப்பட தேனை தூயத் தேனாக காண்பிக்க பயன்படுகிறது என சிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தற்போது தொற்றுநோய் பரவி வரும் நிலையில் தொற்றுநோயை எதிர்த்து போராடும் குணம் தேனுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டுள்ள இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு; அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும்