ஃபைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதால், உலகின் முதல் நாடு என்ற பெயரை இங்கிலாந்து பெற்றுள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணிகளில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

ஜெர்மன் நிறுவனமான பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் (PFizer) நிறுவனம், கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாகவும், 95% செயல்திறன் உடையதாகவும், ஆனால், மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற உறைநிலையில் வைத்து மருந்தை பாதுகாக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது பிஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஃபைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரவலான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடு என்ற பெயரை இங்கிலாந்து பெற்றுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டாளர் ஜாப் கூறும்போது, இந்த தடுப்பூசி கோவிட்-19 நோய்க்கு எதிராக 95% வரை பாதுகாப்பை வழங்கும், இது அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. முதல்கட்டமாக வயதானவர்கள், பாதிக்கப்படக்கூடிய நோயாளிகள் உள்பட உடனடி தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது.

இங்கிலாந்து ஏற்கனவே 40 மில்லியன் டோஸஸ் அளவை ஆர்டர் செய்துள்ளது. அது 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட போதுமானது என்றும், சுமார் 10 மில்லியன் டோஸ் விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதிவில், “தடுப்பூசிகளின் பாதுகாப்பு, நம் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் பொருளாதாரத்தை மீண்டும் நகர்த்தவும் அனுமதிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்