லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதி நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

மேலும் விவசாயிகள் மீது கார் ஏறி கொல்லப்பட்ட சம்பவத்தை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு (SIT) நேற்று (14.12.2021) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த சம்பவம் எதார்த்தமாக நடந்தவை அல்ல., திட்டமிட்ட தாக்குதல் என்றும், இதில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் இன்று (15.12.2021) மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்றும், அமைச்சர் பதிவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் சிறப்பு விசாரணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையிலிருந்து அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அதேபோல உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ராகுல் காந்தியை தொடர்ந்து தமிழக எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்தனர். எதிர்க் கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.