நீங்கள் இந்தியரா? என திமுக எம்.பி கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி கேட்டதற்கு, இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போது முடிவு செய்யப்பட்டது என்று கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. அக்கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது முக்கிய கொள்கையாகும். கலைஞர் கருணாநிதி தனது 14 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர். அதேபோல் இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 38 இடங்களை வென்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழிக்கு விமானநிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கனிமொழி தனது ட்விட்டர் பதிவில்,”இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த (CISF) பெண் போலீஸ் என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார்.

அதற்கு நான், எனக்கு இந்தி தெரியாது. என்னிடம் தமிழிலோ, இந்தியிலோ பேசுங்கள் என்று கூறியபோது, அவர் உடனே நீங்கள் இந்தியரா? என்று கேள்வி எழுப்பினார். உடனே நான் திடுக்கிட்டேன். இந்தி தெரிந்திருந்தால் இந்தியர் என்பது எப்போது முடிவு செய்யப்பட்டது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தித் திணிப்பு ‘#HindiImposition’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் தனது கேள்வியை வைரலாக்கி வருகிறார். பலரும் இந்த ஹாஷ்டாக்கை குறிப்பிட்டு, இந்திக்கும் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க: ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்கத்தொகையுடன் பேஸ்புக் நிறுவனம் அனுமதி