நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், சித்ராவின் நடத்தையில் ஹேமந்த் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி ஒரு தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், சித்ராவின் கணவர் ஹேமந்த் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேமந்த், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஹேமந்த் மனுவில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவோ, அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை.

தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை எனவும், எந்தக் குற்றமும் செய்யாத தனக்கு ஜாமின் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஹேமந்த்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் சார்பிலும், அவரது நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சித்ராவின் நடத்தையில் ஹேமந்த் சந்தேகம் கொண்டதாலேயே சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயமோ, தடமோ அவரது கழுத்தில் இல்லை என அவரது பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தேகம் கிளப்பினர்.

தற்கொலை தான் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், ஹேமந்த்தின் ஜாமின் வழக்கில் இடையீட்டு மனுதாரராக அவரது நண்பர் சையதை அனுமதிக்க முடியாது எனக் கூறி, இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; மொத்த வாக்காளர்கள் 6,26,74,446