தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஷால். இவர் நடிகர் சங்கத்தில் செயலாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என பல பதவிகளை வகிக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் மீது அதிருப்தியில் இருந்த தமிழ் திரைப்பட தயார்ப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்று தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நடிகர் விஷாலின் நண்பர் உதயா உட்பட தயாரிப்பாளர்கள் எஸ்.வி.சேகர், டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், விடியல் சேகர் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி, தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்களில் ஏ.எல்.அழகப்பன் கூறிகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சங்கத்திற்கான நிரந்த வைப்பு தொகை ரூ. 7 கோடி எங்கே போனது என்று தெரியவில்லை.

பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் தன்னிசையான முடிவுகளை அவர் எடுத்து வருகிறார். தயாரிப்பாளர் சங்க தலைவரானதும் ஆறே மாதத்தில் தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளி கம்பி எண்ண வைப்பேன் என்று விஷால் சவால்விட்டார். தமிழ் ராக்கர்ஸில் அவருக்கு பங்கு உள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது என்று ஏ. எல். அழகப்பன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் நடிகர் விஷால் மீது முதலமைச்சர் பழனிசாமியிடம் புகார் அளிக்க உள்ளோம். இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தியதில் உள்நோக்கம் உள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று இயக்குநர் பாரதிராஜா உட்பட தயாரிப்பாளர்கள் குழு முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் விஷால் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இதனிடையே, விஷாலின் செயல்பாடுகளுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், “குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கான இடத்தை கொடுக்கும் மனப்பாங்கு விஷாலுக்கு இருக்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்”.

தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் இன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விஷால் மீது பாண்டிபஜார் காவல் நிலையத்தில் இருபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, விஷால் தனது டுவிட்டரில், “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நேற்று சிலர் பூட்டு போட்டபோது அமைதியாக இருந்த போலீஸ் இன்று தவறே செய்யாத என்னையும், என் சக ஊழியர்களையும் கைது செய்துள்ளது. நாங்கள் போராடுவோம். இளையராஜா சார் நிகழ்ச்சியை நடத்தி கஷ்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு உதவ நிதி திரட்டுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அனைத்தையும் இழந்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய நினைப்பதால் என்னை டார்கெட் செய்கிறார்கள். என்ன நடந்தாலும் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். என் மனசாட்சி சுத்தமாக உள்ளது. கடவுளும், உண்மையும் என் பக்கம் உள்ளது. இளையராஜா சார் நிகழ்ச்சியை நடுத்துவதில் இருந்து என்னை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று விஷால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.