தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்டவரான மனோபாலா (வயது 69) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் மனோபாலா. பாரதிராஜாவின் உதவி இயக்குனராக தனது திரை வாழ்வை துவங்கிய இவர் ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

மேலும், பிள்ளை நிலா, சிறை பறவை, ஊர் காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இயக்கத்தை தவிர்த்து சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். எச். வினோத் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார் மனோபாலா.

இந்நிலையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய மனோபாலா இன்று (3.05.2023) தனது இல்லத்தில் காலமானார். மனோபாலாவின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் கண்ணீருடன் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனோபாலாவின் திடீர் மறைவு குறித்து அவரது மகன் ஹரீஷ் கூறுகையில், “என் அப்பா நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சைக்கு பிறகு நன்றாக உடல்நலம் தேறி வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் திடீரென மோசம் அடைந்தது.

இந்நிலையில் இன்று காலமாகிவிட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அப்பாவின் இறுதி சடங்கை நாளை நடத்தவுள்ளோம். பத்திரிக்கையாளர்கள் என்றால் என் தந்தைக்கு மிகவும் உயிர். நீங்கள் தான் அவரது இறுதி சடங்கை நடத்த முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மனோபாலாவின் மறைவிற்கு ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் மனோபாலாவின் மறைவு செய்தி அறிந்து நடிகர் விஜய் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணிக்கு மேல் தகனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரு. மனோபாலா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.