வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் சுமார் 40 ஆயிரம்  கோடிகள்  கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. 

தொழிலதிபர் விஜய் மல்லையாவை போல், இவர்களும் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினர். 

நீரவ் மோடி மீது சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் நிதி மோசடி சட்டத்தின்  கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன. இவரது வங்கி கணக்குகள் எல்லாம் முடக்கப்பட்டு, இவரை கைது செய்ய இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அவர் எங்கு  இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருப்பதாக மோடியின் பாஜக அரசு கூறி வந்த நிலையில்  இவர்  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ ஆதாரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் அந்நாட்டு பிரபல தினசரி டெலிகிராப் செய்தி  வெளியிட்டது.

இவர் லண்டனின்  மேற்கு பகுதியில் சென்டர் பாய்ன்ட் டவர் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 3 படுக்கை அறை கொண்ட இவரது வீட்டுக்கு மாத வாடகை 15 லட்சம். இவரை இங்கிலாந்தின் ‘டெலிகிராப்’ பத்திரிக்கை  நிருபர் அடையாளம் கண்டு அவரிடம், சில கேள்விகள் கேட்டார். இங்கிலாந்து அரசிடம் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆனால், எந்த கேள்விக்கும் நிரவ் மோடி  பதில் அளிக்கவில்லை. ‘‘மன்னிக்கவும்,  பதில் அளிக்க விருப்பம் இல்லை’’ என கூறிவிட்டு நீரவ் மோடி சென்றார். 

அறுவா மீசையுடன் காணப்படும் நீரவ் மோடி 9 லட்சம் மதிப்புள்ள  ஆஸ்ட்ரிச் கோட் அணிந்திருந்தார். இவர் லண்டனில் வைர வியாபாரம் செய்து வருகிறார். 

இவருக்கு இங்கிலாந்து அரசும் தேசிய இன்சூரன்ஸ் எண் வழங்கியுள்ளது. இதன் மூலம், இவர் லண்டனில் சட்டரீதியாக வர்த்தகம் செய்ய  முடியும், வங்கி கணக்குகளையும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. 

இது சமூக வலை தளத்திலே வெளியானவுடன் வேறு வழியே இல்லாமல்  இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரும் மனுவை லண்டன் நீதிமன்றத்துக்கு  அனுப்பும்படி இங்கிலாந்து உள்துறையிடம் 2 நாட்களுக்கு முன் கூறினோம். 

அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது’’ என்றனர். இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அளித்த  பேட்டியிலும், ‘‘நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார். 

சமூக வலைதளத்திலே வைரலாகியதால் தனது மவுனத்தை கலைத்த மோடி அரசு  வேறு வழியில்லமால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மார்ச் 25-ம் தேதி நீரவ் மோடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த லண்டன் நீதிமன்றமும் அதிரடியாக   உத்தரவிட்டுள்ளது.