திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

கடந்த 2016ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட ஏ மற்றும் பி படிவங்களில்  அதிமுக கட்சியின் அங்கீகார கடிதத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏ.கே.போஸ் வேட்பு மனு தாக்கல் செய்த சமயத்தில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். 

எனவே, போலியான கையெழுத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் செய்து தேர்தலில் போட்டியிட்டதால் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் டாக்டர் சரவணன் சார்பில் வக்கீல் அருண் ஆஜரானார். வழக்கில், ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்த டாக்டர் பாலாஜி உள்ளிட்ட பலர் சாட்சியம் அளித்தனர். 

டாக்டர் பாலாஜியிடம் மனுதாரரின் வக்கீல் அருண் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்ததை நேரில் பார்த்தீர்களா, அந்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்ததற்கு சான்றளித்தீர்களா உள்ளிட்ட கேள்விகளை கேட்டார். இதற்கு மழுப்பலான பதிலகள் வந்த நிலையில் 

மேலும் பல்வேறு சாட்சிகளின் விசாரணையின் அடிப்படையில், வேட்பு மனுவில் பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவின் ைகரேகை உண்மைதானா என்பதை கண்டறிய வேண்டும். அதற்காக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த போது அவரிடம் பெங்களூர் சிறை அதிகாரிகள் பதிவு செய்த கைரேகையை கொண்டு வர வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

ஆனால் இதை எதிர்த்து ஏ.ேக.போஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கைரேகை தொடர்பான விஷயங்களை விட்டு தேர்தல் வழக்கை விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.  

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் மீண்டும்  விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தார். 

இதற்கிடையே ஏ.கே.போஸ் காலமானார்.  இந்நிலையில் நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 

அதில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் வழக்கு தொடர்ந்த டாக்டர் சரவணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி,  இந்த வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்க வேண்டும். இந்த வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலைத் தள்ளிவைத்துள்ளது என்று முறையிட்டார். 

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி, வழக்கை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைப்பது தவறு. தேர்தலை நடத்தக்கூடாது என்று எந்த உத்தரவையும் இந்த நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார். 

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் நேற்று அறிவித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் அவரை அங்கீகரித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏ மற்றும் பி  படிவங்களில் கைரேகை வைக்கும்போது சுயநினைவுடன் தான் இருந்தார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. 

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவை தான் மட்டுமே சந்தித்ததாகவும், அவரை சந்திப்பதற்கு முன்பாகவே வேட்புமனு படிவத்தில் அவருடைய கைரேகை இருந்ததாகவும் மனுதாரரின் வக்கீல் அருணின் குறுக்கு விசாரணையின்போது தெரிவித்துள்ளார். 

எனவே, அந்த கைரேகையை அவர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்கும்போது அவரிடமிருந்து பெறவில்லை என்பது அவரது வாக்குமூலத்தில் இருந்தே ஊர்ஜிதமாகிறது. 

ஆளுநர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் என்று ஒருவரும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்ற நிலையில் டாக்டர் பாலாஜி மட்டும் தனியாக சந்தித்தேன் என கூறுவதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.  

வேட்புமனுவுடன் தேர்தல் படிவம் ஏ மற்றும் பி படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாக  கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்ததை தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் மூலமாக  அங்கீகரித்துள்ளது விதிகளுக்கு முரணானது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆனையாளர் லக்கானி அதிமுக அரசின் பிரதிநிதியாகவே செயல்பட்டுள்ளார் 

அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது உறுதியாகியுள்ளது. எனவே, ஏ.கே.போசை அங்கீகரித்து அளிக்கப்பட்ட வேட்புமனு படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது செல்லாது என்பதால் அவரது வெற்றியும் செல்லாது. 

இதை இந்த நீதிமன்றம் பரிசீலனை செய்து ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளிக்கிறது. டாக்டர் சரவணன் தொடர்ந்த தேர்தல் வழக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்பதால் தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரிய டாக்டர் சரவணன் தாக்கல் செய்த துணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மூலம் மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது  சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிக்கி பதவி இருமுறை இழந்த  ஜெயலலிதா பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. 

மேலும் அவர் சில உயில் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அது குறித்து அவர் கையெழுத்துப் போடாமல் சில பத்திரங்களில் கை ரேகை பதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இப்போது நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், சொத்து பத்திரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கைரேகைகளும் சந்தேகத்துக்குரியவையாக மாறியுள்ளன. 

இதனால் விரைவில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்றும், இது குறித்து ஜெயலலிதாவின் ரத்த பந்தங்கள் வழக்குத் தொடருவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த தீர்ப்பு சசிகலா தினகரன் அணி மீது மக்கள் மன்றத்தில் அதுவும் தேர்தல் நேரத்தில்  மீண்டும் சந்தேகம் கிளப்பி வருவதால் அதிமுக வினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்