தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.

அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளை இயக்க அனுமதி அளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வைத்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. பின்னர் பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சமீபத்தில் நடிகர் விஜய்யும், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார். இன்று நடிகர் சிம்பு வெளியிட்ட செய்தியில், 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 100% இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

கந்து வட்டியைவிட மோசமான ஆன்லைன் கடன் செயலிகள்.. சீனர்கள் உள்பட 4 பேர் கைது