தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து நவம்பர் 11 ஆம் தேதி வட தமிழகம் அருகே வரும். இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நவம்பர் 11 ஆம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று முன் தினம் முதல் நேற்று வரை சென்னையில் பலத்த மழை பெய்தது.

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இத்தனை மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இது மேகவெடிப்பு அல்ல, அதை போன்றதொரு மழை என தெரிவித்துள்ளார்கள்.

சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை 5 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ந்தது. சென்னையில் அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 25 செ.மீ கனமழை பதிவாகி உள்ளது.

அதேபோல் மைலாப்பூரில் 23 செ.மீ, அம்பத்துரில் 21 செ.மீ மழையும் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் எம்ஆர்சி நகர், அண்ணா பல்கலைகழகம், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி, நந்தனம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ந்தது.

வடசென்னையில் பெய்த கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் திறந்துவிடப்பட்டுள்ளன. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் சில பகுதிகளுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் மக்களுக்கு உணவு பொருட்களையும் அத்தியாவசிய தேவைகளும் வழங்கினார்.

14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்:

கன முதல் மிக கனமிக கனமழை வரை பெய்யும் என்று 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:

தஞ்சை, திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் மழை காரணமாக 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.