கோவில்களில் இனி முடி காணிக்கைக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், பழனி கோவிலில் இன்று முதல் இலவச மொட்டை அடிக்கும் திட்டம் அமலுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, செப்டம்பர் 04 இந்து சமய அறநிலையத்துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கைக்கான கட்டணம் இனி வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த நடைமுறை இன்று (செப்டம்பர் 06) முதல் அனைத்து கோவில்களிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பழனி கோயிலில் இன்று பக்தர்கள் கட்டணம் ஏதும் இன்றி முடி காணிக்கை செலுத்த இலவச டிக்கெட் வழங்கப்பட்டது.

இது தவிர கூட்ட நெரிசல் ஏற்படாமல் தனியாக முடி காணிக்கை செலுத்த இடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் மிகுந்த வரவேற்பை தெரிவித்துள்ளனர். இருப்பினும் டிக்கெட் வழங்கப்பட்ட பிறகும் மொட்டை அடிக்கும் ஊழியர்கள் 50 ரூபாய் முதல் ரூ.100 வரை வசூல் செய்தாக பக்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

கோவில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டம்: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு