தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறவினரும் ஒப்பந்ததாரர் மனோகரனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் நடைபெற்று வந்த வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் டி. மனோகரன். இவர், திருவாரூர் மாவட்டத்தில் அதிமுகவில் முக்கிய பிரமுகராகவும், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறையின் அரசு கட்டுமானப்பணி செய்வதற்கான முதல்நிலை ஒப்பந்ததாரகவும் இருந்து வருகிறார்.

இவரது வீடு, மன்னார்குடி தென்வடல் 6-ஆம் தெருவில் உள்ளது. இந்நிலையில், மத்திய வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் 5 பேர் கொண்ட குழுவாக பிரிந்து, தனித்தனி காரில், திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மன்னார்குடிக்கு வந்தனர்.

பின்னர், டி. மனோகரனின் வீடு, பெரியகம்மாளத் தெருவில் உள்ள அலுவலகம், கீழராஜவீதியில் உள்ள தங்கும்விடுதி, பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். வருமானவரிச் சோதனை நடைபெற்ற மூன்று இடங்களிலும், வெளியூர் போலீஸார் நவீன துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கிராமம் பிரதான சாலையில் நாகலூர் கிராமத்தில் மனோகரனுக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபத்திலும் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை காலையில் தொடங்கிய சோதனை இன்று காலை 10.30 மணி வரை நீடித்தது.நேற்று காலை மத்திய வருமானவரித் துறையைச் சேர்ந்த 25 பேர் சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், மாலையில் கூடுதலாக மேலும், 20-க்கும் மேற்பட்டோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில் அதிமுக அமைச்சர் தொடர்புடைய பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இதே தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது எப்ரல் மாதத்தில் மீது வழக்குப்பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடதக்கது . 30 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் காமராஜ் மீது உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை செய்ய தவறினால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது