சேலம் 8 வழிச்சாலைக்கு சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவதாக தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர். தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆர்வம் காட்டவில்லை என நீதிபதிகள் அரசை கண்டித்தனர்.

சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழி பசுமை சாலையை ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்காக நில அளவைப் பணிகளை தமிழக வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, பாமக எம்.பி. அன்புமணி, வக்கீல்கள் சூரியப்பிரகாசம், வி.பாலு உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது.

விசாரணையின்போது, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் எந்த பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நில உரிமையாளர்கள் சார்பில் வக்கீல் மோகன் ஆஜராகி திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்திய 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்திருப்பதாக தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இத்திட்டத்திற்கு எதிராக அமைதியாக, ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் திருமாறன் ஆஜரானார். விவசாயிகள் சார்பில் வக்கீல் நாகஷீலா ஆஜராகி வாதிட்டார். அப்போது, நீதிபதிகள், இத்திட்டத்திற்காக தர்மபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. பதிலுக்கு மரம் நடப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், இது தொடர்பாக பதில் தர அவகாசம் வேண்டும் என்றார்.

இதைக்கேட்ட கோபமுற்ற நீதிபதிகள், வழக்கு குறித்த தகவல் இல்லாமல் நீதிமன்றத்திற்கு வரவேண்டாம். இந்த வழக்கில் ஆஜராக அரசு வக்கீல்களை பத்திரிகை வைத்தா அழைப்பது?. இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே அரசு வக்கீல்கள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் (எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு) சென்னை முழுவதும் வைக்கப்பட்ட பேனரில் அரசு வக்கீல் ஒருவரின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அரசு வக்கீலே மீறுவதை ஏற்க முடியாது. பேனரில் புகைப்படம் வைக்க வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கு வர வேண்டாம். அரசு வக்கீல் பதவிக்கு ஒரு மரியாதை உள்ளது. அதை கெடுக்கும் விதத்தில் செயல்பட வேண்டாம் என நீதிபதிகள் கண்டித்தனர்

மேலும் சட்ட விரோதமாக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று கடும் கண்டனம் கூறி வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞரை பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா?. எந்த தகவலும் இல்லை அவகாசம் வேண்டும் என்றே திரும்ப திரும்ப கூறுகின்றீர்கள். வெட்டிய மரங்களுக்கு பதிலாக எத்தனை மரங்கள் நடப்பட்டன .. என நீதிபதிகள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் பேசாமல் அரசு வழக்கறிஞர் முழித்ததாக செய்தி குறிப்பு கூறுகிறது