சமீபகாலமாக நடிகைகள் பலர் பல பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் சபரிமலை ஐயப்பன் கோவில் விசயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புனித யாத்தீரிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

‘முதல் மரியாதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சனி. மேலும் இவர் கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம் உள்பட பல படங்களில் நடித்தவர். தமிழை அடுத்து இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நடிகை ரஞ்சனி கூறியதாவது, “ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் ஆச்சரியமாக பார்க்கவில்லை. காரணம் வட இந்திய நீதிபதிகளுக்கு ஐயப்பனையும் தெரியாது, நமது வழிபாட்டு முறைகளும் தெரியாது. நமது வழிபாட்டு முறைகளை பற்றி தெரிந்த தென்னிந்திய நீதிபதி ஒருவரை அந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் சேர்க்க வேண்டும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து போராடவில்லை என்றால் நமது கலாசாரமும் பாரம்பரியமும் அழிந்து விடும்.

இதற்காக ரெடி டூ வெயிட் என்ற இயக்கத்தில் சேர்ந்துள்ளேன். இதில் எந்தவித பாலின பாகுபாடு இல்லாமல் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்” என கூறியுள்ளார்.