முழு ஊரடங்கின் இரண்டாம் நாளான நேற்று சென்னையில் ஒரே நாளில் தடையை மீறி வெளியில் சுற்றியதாக 4,799 வழக்குகளும், 7,907 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்திலும், இந்தியளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூன்.19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்தியில், “கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பெருநகரில் இரண்டாம் நாளான நேற்று சென்னையில் ஒரே நாளில் தடையை மீறி வெளியில் சுற்றியதாக 4,799 வழக்குகளும், 7,907 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும்- எடப்பாடி பழனிசாமி

இதுவரை தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 6,81,952 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை மீறியதாக 4,98,193 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராதமாக இதுவரை ரூ.14,10,02,210 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.