தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய ஆனந்த் சுப்பிரமணியனை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவருக்கு மார்ச் 6 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசியப் பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. பின்னர் அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து விலகினார்.

சித்ரா ராமகிருஷ்ணா, தனது பணிக்காலத்தில் தேசியப் பங்குச்சந்தையின் வணிக திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள், ரகசியங்கள் என பலவற்றையும் இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவருடன் பகிர்ந்து கொண்டு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டியது.

மேலும் பங்குச்சந்தை வர்த்தகத்தின் அன்றாட நடவடிக்கையிலும் சாமியார் சித்ரா ராமகிருஷ்ணா மூலம் பங்கு பெற்றிருக்கிறார். அந்த சாமியார் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். அந்த சாமியாரின் ஆலோசனைப்படி சென்னையைச் சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை செயலாக்க அதிகாரியாகவும், ஆலோசகராகவும் சித்ரா ராமகிருஷ்ணன் நியமித்துள்ளார்.

தேசியப் பங்குச்சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு முறைப்படி விளம்பரங்கள் செய்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால் அது தொடர்பான எந்த செயல்களிலும் ஈடுபடாமல் சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியத்தை அந்த பதவியில் அமர்த்தி உள்ளதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

இதனையடுத்து தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக என்எஸ்இ-யில் தலைமை நிர்வாக அதிகாரி பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக மும்பை சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆனந்த் சுப்பிரமணியத்திடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று (24.2.2022) இரவு ஆனந்த் சுப்பிரமணியத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், சென்னையில் இருந்து மும்பைக்கு அழைத்து சென்றனர். ஆனந்த் சுப்பிரமணியம் வீட்டில் இருந்து பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஆனந்த் சுப்பிரமணியனை மார்ச் 6 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் சுப்பிரமணியத்தின் மனைவி பங்கு சந்தையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மூலமாகவே ஆனந்த் சுப்பிரமணியன் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு அறிமுகமாகி இருக்கிறார். அதன் பிறகு பங்கு சந்தை ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனந்த் சுப்பிரமணியன் கைதாகி உள்ள நிலையில், அடுத்த கட்டமாக இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தேசிய பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கவுரவ் வல்லப், எழுப்பிய கேள்விகளில், “சித்ரா ராமகிருஷ்ணாவின் பங்குச்சந்தை முறைகேடு செயல்கள் குறித்து 2016 முதல் செபி என்ன செய்து கொண்டிருந்தது?

கடந்த 6 ஆண்டுகளாக ஏன் இந்த வழக்கை சிபிஐ, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO), அமலாக்கத்துறை (ED) மற்றும் வருமான வரித்துறை (IT) விசாரணைக்கு மாற்றவில்லை.

2015 முதல் என்எஸ்இ-யில் இணை இருப்பிடம் மற்றும் அல்கோ வர்த்தக மோசடி புகாரளிக்கப்பட்டபோது, ​​என்எஸ்இ-க்கு எதிராக நிதி அமைச்சகம் மற்றும் செபி தொடங்கிய நடவடிக்கை என்ன?

செபி ஏன் என்எஸ்இ-யிடம் விசாரணையை மேற்கொள்ளாமல் தடயவியல் தணிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது.

இந்த அடையாளம் தெரியாத இமயமலை யோகியின் IP முகவரியை ஏன் கண்டுபிடித்து வெளியிட முடியவில்லை?

பிரதமரோ, ஒன்றிய நிதியமைச்சரோ இந்த விவகாரம் குறித்து பேசத் தயாராக இல்லாததால், ஒழுங்குமுறை ஆணையம் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டாமா..” என பல்வேறு கேள்விகளை கவுரவ் வல்லப் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.