டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான போராட்டம் குறித்தோ, அவர்களது கோரிக்கை குறித்தோ வெளிப்படையாக ஊடகத்திலோ விவசாயிகளிடத்திலோ, பிரதமர் மோடி இதுவரை பேசாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

டெல்லியில் போராடும் விவசாயிகளின் உயிருக்கும், உடைமைகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பிரதமர் மோடி தான் பொறுப்பு. விவசாயிகளின் போராட்டத்துக்கு கனடா பிரதமர் தார்மீக ஆதரவு கொடுத்திருக்கிறார். ஆனால், பிரதமர் மோடியோ விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இது மனிதநேயமற்ற செயல்.

புதிய வேளாண் சட்டங்களால் விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயமும், இயற்கை வளங்களும் இச்சட்டங்களால் கடுமையாக பாதிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டத்தை அதிமுக ஆதரித்தது தமிழர்களுக்குச் செய்த துரோகம். எனவே, புதிய வேளாண் சட்டங்களுக்கு அளித்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். இல்லையெனில், முதல்வரை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவு; லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு