சென்னையில் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள 15 வழித்தடங்களில் மின்சாரப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பசுமைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை உலகளவில் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகளில் பேட்டரியால், இயங்கும் மின்சாரப் பேருந்துகளை இங்கிலாந்தின் ‘சி-40’நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள், சென்னையில் முகாமிட்டு போக்குவரத்து, நிதி, எரிசக்தி துறை உயரதிகாரிகளை கடந்த வாரம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்

இதை தொடர்ந்து பயணிகள் நெரிசல் அதிகமுள்ள இடங்களான பிராட்வே, தியாகராய நகர், ராஜீவ் காந்தி சாலை, புரசைவாக்கம், தாம்பரம், வேளச்சேரி, அம்பத்தூர் உள்பட மொத்தம் 15 முக்கிய வழித் தடங்களில் மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த சி-40 நிறுவனம், பேருந்துகளின் மின்சார பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கான மையங்களை அமைப்பது குறித்து மின்சார வாரியத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

மேலும் இப்பேருந்துகளை இயக்குவது தொடா்பாக சி-40 நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளனார்

அதில், கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துவது, தேவையான இடங்களில் பேட்டரி சார்ஜ் மையங்களை அமைப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக இடம் பெற்றுள்ளது.

பின்னர் இக்குழுவினர், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, கடந்த 24-ஆம் தேதி சந்தித்து மின்சாரப் பேருந்துகளை இயக்குவது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்

இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் மின்சாரப் பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும் என தெரிவித்தார்

ஆனாலும் மின்சாரப் பேருந்துகளை இயக்குவது தொடா்பான பணிகள் அனைத்தும் தொடக்க நிலையில்தான் உள்ளன என்கிறார்கள் அதிகாரிகள்