ஜப்பானின் வடகிழக்கு மாகாணங்களில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஜப்பான் பசிபிக் ரிங் ஆஃப் ஃபையர் எனப்படும் நிலநடுக்கம் ஆபத்துள்ள பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவ்வப்போது நில அதிர்வு ஏற்படுவது இயல்பாகவே இருக்கிறது. இருப்பினும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஃபுகுஷிமாவில் 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18,500 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், அணுமின் நிலையங்கள் பாதித்தன. அப்போது வெளியான அணு கதிர்வீச்சின் தாக்கம் இன்றும் ஃபுக்குஷிமாவை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் ஃபுகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே 16.3.2022 இந்திய நேரப்படி இரவு 8.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா பகுதியே குலுங்கியது. பொது இடங்கள், வணிக வளாகங்கள் என கட்டுமான சேதம் பெருமளவில் உள்ளது.

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் சுமார் 20 லட்சம் மக்கள் மின் இணைப்பு இல்லாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ரிக்டரில் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் டோக்யோவின் வடகிழக்கில் 8 அங்குல உயரத்திற்கு கடலில் அலைகள் எழும்பியதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானியல் முகமை தெரிவித்துள்ளது. ஃபுகுஷிமாவில் கட்டடங்கள் சேதமடைந்ததுடன், தீ விபத்தும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாகவும், 107 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபுகுஷிமா, மியாகி இடையே புல்லட் ரயில் ஒன்று தடம்புரண்டதாக ஜப்பான் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் குறித்து பேசிய ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் ஹிரோகாசு மட்சுனோ, சேத விவரங்களை ஆராய்ந்து வருவதாகவும், புகுஷிமா அணு உலை, டைச்சி, டைனி அணுமின் நிலையங்கள், ஒனகாவா அணுமின் நிலையம் ஆகியனவற்றில் இருந்து எவ்வித எச்சரிக்கைத் தகவலும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றைய நிலநடுக்கத்தால் டயோட்டோ மோட்டார் கார்ப் போன்ற சிப்மேக்கர் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உலகளவில் சிப் விநியோக பிரச்சினைகளால் ஸ்மார்ட்ஃபோன், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல் துறைகள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள டயோட்டோ மோட்டார் கார்ப் உற்பத்தியை தொடங்கி இயல்புக்கு திரும்ப காலம் ஆகும் என்பதால் இத்துறைகளில் மேலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.