கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,386 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,566 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 194 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: கொரோனா பாதிப்பால், இந்தாண்டில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில்.. அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதித்தவர்கள் எண்ணிக்கை 19,372-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2,252 ஆக இன்று உயர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் 1,559, திரு.வி.க.நகர் 1,325, தேனாம்பேட்டை 1,317 மற்றும் தண்டையார்பேட்டை 1,262 ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இன்று சென்னை அண்ணாநகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,046 ஆக உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதித்த மண்டலங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.