எச்ஐவி ரத்தம் ஏற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாங்காடு பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 
சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 27 வயது பெண் கர்ப்பிணியாக இருந்த போது, அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தினமும் பரிசோதனை செய்து வந்தார். அப்போது, உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாகவும், அதனால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ரத்தம் ஏற்ற செல்லுமாறும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
அங்கு, அவருக்கு ஏப்ரல் 5ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி 8 மாதத்தில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
 
இதில், எச்ஐவி இருப்பதாக கண்டறியப்பட்டது. பெரும் பரபரப்புக்குள்ளான சாத்தூர் சம்பவத்தை அறிந்த இளம்பெண் தனக்கு நேர்ந்ததை பற்றி அக்கம்பக்கத்தில் தெரிவித்தார். அதன்பிறகு வெளி உலகிற்கு இந்த விவகாரம் தெரிய வந்தது.
 
இதைதொடர்ந்து, அந்த இளம்பெண் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2013 ஆகஸ்ட் 19ம் தேதி எனக்கு திருமணம் நடந்தது.
 
ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு 2017ல் மீண்டும் கருவுற்றேன். இதுதொடர்பாக மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று கருவுற்றதை உறுதி செய்துகொண்டேன். பின்னர் மாதம் தோறும் தவறாமல் உடல் பரிசோதனை செய்து வந்தேன். முதல் மாதம் சென்ற போது எல்லாவித ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது.
 
8.3.2018ல் என்னை டாக்டர் ரத்த பரிசோதனை செய்து வரும்படி அறிவுறுத்தினார். பின்னர் அவர்களே முத்துக்குமரன் மருத்துவமனையில் பணம் குறைவாக வாங்குவார்கள். எனவே அங்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்யுமாறு அனுப்பி வைத்தனர்.
 
அன்றே நான் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு எச்ஐவி இல்லை என சான்று வழங்கப்பட்டது. பின்னர் அடுத்த மாதம் 5.4.2018ம் தேதி நான் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5வது மாத பரிசோதனை சென்றேன். அங்கு அவர்கள், என் உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளது என்று கூறி ரத்தம் ஏற்ற வேண்டும் என்று கூறினார்.
 
உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்று கூறி என்னை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு டாக்டர்கள் கொண்டு வந்த ரிப்போர்ட்டை பார்த்து விட்டு எனக்கு ரத்தம் ஏற்றினார்கள். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து 15.4.2018ல் என்னை டிஸ்சார்ஜ் செய்தனர்.
 
மறுநாள் நான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டரிடம் பரிசோதனைக்காக சென்றேன். அப்போது ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளது என்று கூறினார். பின்னர் ஒழுங்காக பரிசோதனைக்கு சென்று வந்து கொண்டு இருந்தேன். 13.8.2018ல் ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். ஸ்கேன் ரிப்போர்ட்டை மருத்துவமனையில் காட்டிய போது, மீண்டும் என்னை கேஎம்சி மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகும்படி அறிவுறுத்தினர். நான் 18.8.2018ல் காலை 10 மணிக்கு கேஎம்சி சென்று விட்டேன். அங்கு ஓபி சீட்டு போட்டு விட்டு எச்ஐவி ரத்த பரிசோதனை செய்தோம். பின்னர் டாக்டர் எனக்கு எச்ஐவி உள்ளது என்று கூறினார். நான் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.
 
பின்னர் எனது கணவரை ஆலோசனைக்கு அழைத்து பேசினார்கள். நானும் எனது கணவரும் எங்கள் வாழ்க்கையை இப்படி சீரழித்து விட்டீர்களே என்று சண்டை போட்டு விட்டு வந்தோம். பின்னர் 15.9.2018ல் மீண்டும் நான் கேஎம்சி மருத்துவமனைக்கு குழந்தை பெற வேண்டி அனுமதிக்கப்பட்ட அன்றே அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பெற்று எடுத்தேன். அப்போது, அங்குள்ள டாக்டர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும், சுகாதாரத்துறைக்கு ஒரு மனு அளிக்கும்படியும் கூறினார்கள். நான் மனு அளித்தேன்.
 
இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனக்கு எச்ஐவி நோய் உள்ள ரத்தத்தை உடலில் ஏற்றிய கேஎம்சி டீன், டாக்டர் மீதும், பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.