சமீபத்தில் திரைக்கு வந்து இருவேறு சர்ச்சையான விமர்சனங்களுக்கிடையில் ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம் குறித்து நடிகை அமலா பால் கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை அமலா பால் சூப்பர் டீலக்ஸ் படம் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் தாமதமாகவே படம் பார்த்தேன். இருப்பினும் அதை சிறப்பாகவே கருதுகிறேன். ‘சூப்பர் டீலக்ஸ்’ ஒரு வரப்பிரசாதமான படம்.

கலையின் தூய்மையான, கடின உழைப்பின் வடிவாக, தலைசிறந்த படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் உற்சாகமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். மிகவும் சிறப்பு வாய்ந்த தமிழ் சினிமாவில், மேலும் ஒரு அற்புத படைப்பாக இணைந்துள்ளது.

தியாகராஜன் குமாரராஜா ஒரு வலிமையான, அர்ப்பணிப்பு உணர்வு மிக்க இயக்குநர். ஒளிப்பதிவு நிரவ், வினோத், கலை இயக்குநர் விஜய் ஆதிநாத் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதற்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக யுவனின் இசை அமைந்துள்ளது.

ஒவ்வொரு கதாபாத்திரமும், மற்ற கதாபாத்திரத்தை மிஞ்சும் வண்ணம் நடித்துள்ளனர். உண்மையில் அதி அற்புதம்! புதிதாக நடித்துள்ள நான்கு இளைஞர்களுக்கும் சிறப்பான வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் பார்க்கவில்லை, உடனே புக் செய்து படத்தை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.