ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடரும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது சர்ச்சையானதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் ஐபிஎல் புறக்கணிப்போம் ( #BoycottIPL ) என்ற ஹாஷ்-டேக் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

கொரோனா வைரஸை காரணம் கூறி, இந்த ஆண்டு நடக்கவிருந்த இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) முடிவு செய்தது. அதன்படி செப்டம்பர் 19ம் தேதி போட்டி தொடங்கி நவம்பர் 10ம் தேதியுடன் முடியும் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்றும், தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ உள்ளது. இந்நிறுவனம் வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு வழங்குகிறது.

இந்நிலையில் ஜூன் மாதம் லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்கள் கடுமையாக மோதிக் கொண்டதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து, பாஜக மோடி அரசு 59 சீன செயலிகளை தடைசெய்தது. பாஜகவினர் பல்வேறு மாநிலங்களில் சீன பொருட்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் விவோவை பிசிசிஐ விலக்கிக்கொள்ளுமா.. என்ற கேள்விகளும் எழுந்தது. ஆனால் நேற்று (ஆகஸ்ட் 02) நடைபெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் விவோ-தான் டைட்டில் ஸ்பான்சர் என்று அறிவித்தது பிசிசிஐ. இதனால் கோபம் அடைந்த சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் ‘#BoycottIPL’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து ஐபிஎல், பிசிசிஐ இரண்டையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க: பாஜகவின் சீனா எதிர்ப்பு போராட்டங்களை கண்டுகொள்ளாத அமித்ஷா மகன்

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷாவின் மகன். ஜெய் ஷா முக்கியப் பொறுப்பு வகிக்கும் அமைப்பே சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பை நீக்க மறுத்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதனிடையே ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்ய சீனாவின் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதிக்கு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.