சீனாவின் உளவு கப்பல் வருவதை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள நிலையில், சீன உளவு கப்பலின் வருகையால் இந்தியாவிற்கு ஆபத்து உள்ளது என எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவிற்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவு கப்பலை நிறுத்துவதற்கு அந்நாட்டு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கெனல் நளின் கரத், “பல நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் ராணுவக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்று. இதே சூழலில் சீனக் கப்பலுக்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இலங்கை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நிறுத்தப்படும் யுவான் வாங்-5 என்ற சீன உளவு கப்பல், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் தேதி புறப்பட்ட யுவான் வாங்-5 கப்பல் தைவானைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடையும் என்ற தகவல் ஏற்கெனவே வெளியானது.

அப்போதே அது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது. அப்போது அதை திட்டவட்டமாக மறுத்த இலங்கை அரசு, இப்போது உளவு கப்பலின் வருகையை உறுதி செய்திருக்கிறது. சீன உளவுக் கப்பலின் வருகை, இந்தியாவின், குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

சக்தி வாய்ந்த யுவான் வாங்-5 சீன உளவு கப்பலுக்கு 750 கி.மீக்கும் அதிக சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் உண்டு. அதாவது கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் யுவான் வாங்-5 கப்பல் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும்.

அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்பு கொண்டவை என்பதால், சீன கப்பலின் இலங்கை வருகை தென்னிந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சீன கப்பல் இலங்கை வருகை குறித்து கவனமுடன் கண்காணித்து வருவதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீன ராணுவத்தின் தலையீட்டிற்கு இடமளிக்க கூடாது என்று அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள், இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளன.