பள்ளிக் கழிவறையில் சானிட்டரி நேப்கின் வீசி எறிந்தது யார் எனபதைக் கண்டறிய மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனைநடத்திய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஃபாசில்கா மாவட்டத்தில் குந்தால் என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசுப்பள்ளியில்தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. அந்தப் பள்ளியின் கழிவறையில் ஒரு சானிட்டரி நேப்கின் வீசி எறியப்பட்டு கிடந்துள்ளது. இதைக் கண்ட ஆசிரியர்கள் அந்த சானிட்டரி நேப்கினை வீசி எறிந்தது யார் என்பதைக் கண்டறிவதற்காக மாணவிகளின் ஆடைகளை முழுதும் களையச் சொல்லி யார் சானிட்டரி நேப்கின் அணிந்திருக்கிறார்கள் என்று சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விடியோ க்ளிப் ஒன்றும் வெளியானது. இதனால் மாணவிகள் அவமானம் தாங்க முடியாமல் அழுதபடியே தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

விஷயம் பெரிய அளவில் பரவியதால் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாகப் பள்ளிக்குச் சென்று மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் 2 ஆசிரியர்களுக்கு எதிராக சாட்சிகள் இருந்ததால் இருவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில கல்வித்துறை செயலாளர் கிருஷன் குமார் திங்கள் கிழமைக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.