மேற்கிந்திய தீவுகளுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வரிசையாக பெவிலியினுக்கு திரும்பினர். இதனால், அந்த அணி 100 ரன்களை கடக்குமா என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதிக்கட்டத்தில் ஃபேபியன் அலேன் ஓரளவு அதிரடி காட்டி 100 ரன்களை கடக்கச் செய்தார். அவர் அதிகபட்சமாக 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், கலீல் அகமது, பும்ரா, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணியும் திணறியது. ரோஹித் 6, தவான் 3, பந்த் 1 என அடுத்தடுத்து வெளியேறினர். சற்று நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய ராகுல் மற்றும் பாண்டே முறையே 16 மற்றும் 19 ரன்களை எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் விளையாடினார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய குருணால் பாண்டியா அதிரடியாக ரன் சேர்க்க இந்திய அணி 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கார்த்திக் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். அதிரடி காட்டிய குருணால் பாண்டியா 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இருஅணிகளுக்கிடையிலான 2-ஆவது டி20 போட்டி லக்னௌவில் வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.