நாடு முழுவதும் உள்ள எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு 2021 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 20 மொழிகளில் உள்ள படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவுள்ளது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அவர் எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவுள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் அவர்களுக்கு அவர் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுவர் இலக்கியத்திற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிற மொழிகளுக்கான யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கான யுவ புரஸ்கார் விருது பெறுபவரின் விவரங்கள் வேறு தேதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பை, கவிஞர் மு.முருகேஷ் இருவரும் சாகித்ய அகாடமி, பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.